|
புதன் கிரகம்
மெர்க்குரி எனப்படும் புதன் கோளை நோக்கி, மெஸஞ்சர் எனும் விண்கலத்தை, அமெரிக்கா அனுப்பியுள்ளது.
சூரியனுக்கு வெகு அருகாமையில் உள்ள புதன் கோளை நோக்கி, கடந்த 30 ஆண்டுகளில், முதன்முறையாக விண்கலத்தை அமெரிக்காவின் நாஸா நிறுவனம் ஏவியுள்ளது.
பயணத் தூரம் 800 கோடி கிலோமீட்டர் பயண நேரம் ஆறரை ஆண்டுகள். விண்கலம் செலுத்தப்படும் நிகழ்ச்சி, வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.
1970 களின் நடுப்பகுதியில், மரினர்-10 எனும் விண்கலம், புதனை நோக்கி ஏவப்பட்டது. அது முதற்கொண்டு, புதன் கோள் பற்றிய ஆராய்வில், அறிவியலாளர் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எல்லாம் திட்டமிட்டபடி நிறைவேறினால் 2011 ஆம் ஆண்டில், புதன் கோளை வலம் வரும் முதல் விண்கலம் எனும் பெருமையை மெஸஞ்சர் பெறக்கூடும்.
இந்த விண்கலத்தில் இடம்பெற்றுள்ள 7 அறிவியல் கருவிகள், புதனை வலம் வரும் போது, ஓராண்டு முழுவதும், தரவுகளைச் சேகரிக்கும்.
புதன்கோளை மெஸஞ்சர் அணுகும் போது, 370 செல்சியஸ் வெப்ப நிலையினால் அது தள்ளப்படும். ஆனால், அதன் கருவிகள் அறை வெப்ப நிலையில் செயல்படும்.
மெஸஞ்சர் விண்கலப் பயணம் தொடர்பான அனைத்தையும் உருவாக்கித் தந்தது-ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம். மொத்தச் செலவு 42 கோடியே 70 இலட்சம் அமெரிக்க டாலராகும்.
புதன் கோளின் அனைத்துப் பக்கங்களிலும், மெஸஞ்சர் பார்வையை ஓட விடும் என்று அறிவியலாளர் தெரிவிக்கின்றனர்.
புதன் கோளானது, சூரிய மண்டலத்தில் இடம் பெற்றுள்ள மிகவும் வெப்பமான கோள்களில் ஒன்றாகும். நண்பகலில் அதன் வெப்ப அளவு, 900 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
புதன் கோளில் பனி அதாவது ICE உண்டா என்று மெஸஞ்சர் ஆராயவிருக்கின்றது.
பூமியில் உள்ள வானொலி தொலைநோக்காடிகள் மூலமாகப் பார்த்த போது, புதன் கோளில் பனி இருப்பதற்கான வாய்ப்பு தெரியவந்தது.
புதன் கோளின் கட்டமைப்பு, விசித்திரமானது. அதன் மூன்றில் இராண்டு பகுதி, இரும்பாலானது.
பூமி போல அது உருப் பெற்ற, பின்னர் கற்களை இழந்து விட்டிருக்கலாம் என்கிறார் மெஸஞ்சரின் முதன்மை அறிவியலாளரான ஸீன் சாலமன்.
|